மக்கள் உரிமை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழான மக்கள் உரிமையில் வெளிவந்த ஆவணங்கள்

இதழியல் துறையில் இஸ்ரே­லிய கைக்கூலி­

உலகில் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட ஒரே நாடான இஸ்ரேலை எந்தக் காலத்திலும் அங்கீகரிக்கக்கூடாது என்ற கொள்கையில் தேசத்தந்தை காந்தி உறுதியாக இருந்தார். இதற்காகவே காந்தியைப் படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் சங்பரிவர் கும்பலும், அவர்களின் ஆதரவாளர்களும் இஸ்ரேலை மிகவும் நேசித்து வருகின்றனர்.

இஸ்ரேலின் பயங்கரவாதச் செயல்களால் பாலஸ்தீன் மற்றும் லெபனான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவி பொதுமக்களே பலியாகின்றனர். இஸ்ரேலால் கொல்லப்படும் மக்கள் இஸ்லாமிய மக்கள் என்பதற்காகவே மனிதகுல விரோத இந்துத்துவ சேடிஸ்டுகள் முஸ்லிம்கள் படும் கொடுமையால் குளுமை காண்கின்றனர். குழந்தைகள் கொன்று குவிக்கப்படுவதைக் கண்டும் குரூரமாய் சிரிக்கின்றனர்.

இந்துத்துவ சக்திகளுக்கும், இஸ்ரேலுக்கும் காலங்காலமாக கள்ளத் தொடர்பு இருந்து வருகிறது. இஸ்ரேல், உலகம் முழுவதும் தனது கைக்கூலிகளை வைத்துள்ளது. எல்லா நாடுகளிலும் இஸ்ரேலும் அதன் புரவலான அமெரிக்காவும் குறிவைப்பது முதலில் இதழியல் துறையைத்தான். அந்த வகையில் தமிழகத்தில் மொசாட்டின் கைக்கூலி நான்தான் என்று சாட்சி சொல்கின்றன, தலைக்கு வெளியிலும் எதுவுமில்லாத சோவின் மூர்க்கத்தனமான எழுத்துக்கள்.

'சோ'வின் வர்ணாசிரமக் கொள்கையை எதிர்க்கின்ற தமிழ் அமைப்புகள், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவளிப்பதால், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை இன்பத்தோடு ரசிப்பவர் தான் இந்த சோ. அந்த நாளிலேயே தமிழர்களை இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே பேட்டியைத் தன் இதழில் வெளியிட்டு (கொலைக்கு) நியாயம் கற்பித்த கொடிய ஆசாமி சோ, இப்போது இஸ்ரேலின் இனவெறிப் படுகொலைகளை நியாயப்படுத்தவும், மனிதநேயர்களைக் காயப்படுத்தவும் கட்டுரைகளைத் தீட்டி வருகிறார்.

துக்ளக் 26லி07லி06 மற்றும் 9லி8லி06 தேதியிட்ட இதழ்களின் தலையங்கங்களில் 'சோ' வின் இஸ்ரேல் விசுவாசமும், இஸ்லாமிய துவேஷமும், தேசத்துரேகமும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளன.26லி07லி06 தேதியிட்ட துக்ளக் இதழில் 'இஸ்ரேலும் இந்தியாவும்' என்று தலைப்பிட்டு தலையங்கம் தீட்டப் பட்டுள்ளது. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ள இத்தலையங்கத்தில், சம்பவம் நடந்தவுடன் மருத்துவ மனைக்கு உடனே நேரில் சென்று பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் ஆறுதல் சொன்னதையும், அதைத் தொடர்ந்த அரசின் செயல்பாடுகளையும் கேலி செய்துள்ளது துக்ளக் இதழ்.

கோத்ரா சம்பவத்தைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டது போல மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்தும் நடந்து விடாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தடுத்து விட்டதால் துக்ளக் சோவுக்கு வயிற்றெரிச்சல் தாளவில்லை.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த உடனேயே அரசு முழுவீச்சில் களமிறங்கியது, பயங்கரவாதத்திற்கு நாங்கள் எதிரிகள் என்று நிரூபிக்கும் வகையில் முஸ்லிம்களின் மீட்புப்பணிகள் அமைந்தது. 7 மணி நேரத்தில் மும்பை மாநகரம் எழுந்து நிமிர்ந்தெழுந்து நின்றுவிட்டது. மாபெரும் சேதத்தை எதிர்பார்த்த பயங்கர வாதிகளுக்கும், மதக்கலவரத்தை எதிர்பார்த்த சங்பரிவார், துக்ளக் சோ கும்பலுக்கும் ஒரே நேரத்தில் முகத்தில் கரிபூசினர் இந்திய மக்கள்.

இந்துக்களும், முஸ்லிம்களும் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கைகோர்த்துக் கொண்ட காட்சியை மும்பை குண்டுவெடிப்புக்குப் பின் காண முடிந்தது. வெட்டிக் கொள்வார்கள் என எதிர்பார்த்தோரின் எண்ணங்களில் இடிகள் விழ இந்துக்களும் முஸ்லிம்களும் ஒட்டிக் கொண்டனர். இதனால் வயிறெரியும் துக்ளக் சோ, இப்படி எழுதுகிறார்:''ஆக, சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடித்தாகி விட்டது. இனி தீவிரவாதிகளின் அடுத்த ரத்த வெறியாட்டம் நடக்கிற வரையில் வேறு வேலைகளை கவனிக்கலாம். இடையில் சில அறிவாளிகள் 'ஏன் இந்த மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது? என்று ஆராய்ந்து பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவார்கள்.
இந்த அறிவாளிகள் இடதுசாரி சிந்தனை உடைய செக்யூலர் சாரிகளாகத்தான் இருப்பார்கள். இவர்கள் ஆய்வு நடத்தி மும்பை குண்டுவெடிப்புக்குக் காரணம் பாபர் மசூதி இடிப்பே என்று கண்டுபிடிப்பார்கள். பதினைந்து ஆண்டுகளாக நடந்து வருகிற இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைகாரச் செயல்களுக்கெல்லாம் இதுவே பொதுவான காரணம். இன்னும் பதினைந்து ஆண்டுகள் ஆனாலும் இதுவே காரணமாக இருக்கும். இது அவ்வப்போது அறிவாளிகளின் அலசல்களாலும், அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களினாலும் வலியுறுத்தப்படும். அயோத்தி, இப்படி காலத்தால் அழியாத காரணமாக இருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் என்றால் மொகலாய மன்னர்கள் காலத்திலும், பிரிவினை காலத்திலும் நடந்தேறிய அக்கிரமங்களும் கூட ஹிந்துக்களின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாமே!' இப்படி விஷத்தைக் கக்குகிறது சோவின் துக்ளக் ஏடு.

பாபரி மஸ்ஜித் இடிப்பு என்பது நாட்டின் பெருமைக்கு நேர்ந்த களங்கம். அதை அன்று சோவும் கூட கண்டித்தார். உலகில் அதிகமான நபர்களை சாட்சியாக வைத்து நடந்த குற்றம் பாபரி மஸ்ஜித் இடிப்புதான். அன்று அத்வானி பேசிய வெறிப்பேச்சையும், பிரம்மச்சாரிகளான(?) முரளிமனோகர் ஜோஷியும் உமாபாரதியும் கட்டிப்பிடித்துக் கொண்டு ஆடிய ஆட்டத்தையும் நாடு பார்த்தது. ஆயினும் இன்றுவரை அந்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுப்பது துக்ளக் சோவுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலைகாரச் செயலாகத் தெரிகிறது போலும். மொகலாய மன்னர்கள் பல நூறு ஆண்டு காலம் இந்த நாட்டை ஆண்டுள்ளனர். அவர்கள் இந்துக்களை ஒதுக்கியதாகவோ, ஒடுக்கியதாகவோ ஒரு தகவலும் இல்லை. பல கோவில்களுக்கும் மடங்களுக்கும் அவர்கள் மானியம் தந்ததாகவே வரலாறுகள் உள்ளன. ஐம்பதாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த முகலாய மாமன்னர் அவுரங்கசேப், மீனாட்சியம்மைக்குறம், அபிராமி அந்தாதி உள்ளிட்ட பல இந்து சமய பக்தி நூல்களை எழுதிய குமர குருபரருக்கு காசியில் மடம் அமைத்துக் கொடுத்தவர் என்பது வரலாற்று உண்மை.

ஆயினும் முகலாயர்களுக்கு எதிரான கட்டுக்கதைகளைப் பரப்பிவரும் பணியை ஆரிய கும்பல் அன்றே தொடங்கிவிட்டது என்பதை புகழ்பெற்ற அறிஞரான 'ராகுல் சாங்கிருத்தியாயா' எழுதிய 'வால்கா விலிருந்து கங்கை வரை' என்ற நூலில் பாபா நூர்தீன் என்ற அத்தியாயத்தில் காணலாம். முகலாயர் காலத்திலும், பிரிவினைக் காலத்திலும் சோ கும்பலுக்கு என்ன அக்கிரமம் நடந்து விட்டது என்பதை சோ வெளிப்படையாக எழுதத் தயாரா? இந்தத் தலைப்பில் அவர் பொது விவாதம் செய்ய வருவாரா? இஸ்லாம்தான் சாதிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மார்க்கம் என்றார் இந்து சமயத் துறவி விவேகானந்தா. இதுதான் சோவின் ரத்தக் கொதிப்புக்குக் காரணம் போலும். துக்ளக் சோவின் குரூர குணம் தலையங்கத்தின் பல்வேறு பகுதிகளில் தெளிவாகத் தெரிகிறது. ''டெலிபோன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பது, சந்தேகத்தின் பேரிலேயே சிலரை சிறைப்படுத்துவது, தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்களைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவுகிற சட்டம் அவசியமான தேவை.'' ''மனித உரிமையாளர்களின் கூச்சல்களைப் பொருட்படுத்தாமல் அறிவாளிகளின் அயோத்தி ஆய்வுகளைப் பற்றிக் கவலைப் படாமல் பத்திரிகை உலகின் பிரச்சாரத்தை நினைத்துத் தயங்காமல் பொடாவை விட உக்கிரம் அதிகமுள்ள சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.'' ''இஸ்ரேலியன் ஒருவன் பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் பாலஸ்தீனர்கள் பத்து பேரை இஸ்ரேல் தீர்த்துக் கட்டுகிறது. அதனால்தான் இஸ்ரேலையே அழித்து விட நினைக்கிற பகைவர்கள் நாலாபக்கமும் இருந்தும் இஸ்ரேல் இன்னும் தலை தூக்குகிறது. இஸ்ரேல் நம்மில் பத்தில் ஒரு பங்குகூட இல்லை. அவர்களுக்கு இருக்கும் மன உறுதியில் 10ல் ஒரு பங்காவது தோன்றாத வரையில் தீவிரவாதத்தை எதிர்கொள்கிற தகுதி நமக்கு கிட்டாது''

துக்ளக் சோ சொல்ல வரும் கருத்து என்னவெனில், ஒரு இஸ்ரேல் ராணுவ வீரன் கொல்லப்பட்டால் பத்து அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவது போல எந்தத் தீவிரவாதி வெடிகுண்டு வைத்தாலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட வேண்டும், அப்போதுதான் தீவிரவாதம் ஒழியும்(?) என்பது. இதைவிட பயங்கரவாதம் வேறு எதுவாக இருக்க முடியும்? இஸ்ரேலின் மிருக வெறியாட்டத்தைக் கண்டித்துள்ள இந்தியாவை தனது இன உணர்வோடு குறைகூறியுள்ளார் துக்ளக் சோ. 9லி8லி06 தேதியிட்ட துக்ளக் இதழில் ''இஸ்ரேல் செய்வது சரியே'' என்று தலைப்பிட்ட சோவின் தலையங்கம், ஆரிய வெறியின் உச்சத்திற்குச் சென்று இந்தியா இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக உறவு கொள்ள வேண்டும், இஸ்ரேலின் ஒத்துழைப்பை நாட வேண்டும் என்று உபதேசித்துள்ளது.

லெபனானிலும் பாலஸ்தீனத்திலும் அப்பாவிப் பொதுமக்கள் அராஜகமாகக் கொல்லப்படுகிறார்கள். இந்த மனிதகுல விரோதிகள் மழலைப் பூக்களைக்கூட பொசுக்குகிறார்கள். இதை இந்தியா கண்டிக்கக் கூடாதாம். இஸ்ரேல் செய்வது சரியே என 'மொட்டை' தலையங்கம் தீட்டுகிறார் மொஸாட்டின் கைக்கூலி(!) துக்ளக் சோ. கழிவறைச் சுவர்களில் மனம்போனபடிக் கிறுக்கிப் பழகிய ஒரு சைக்கோவால் மட்டுமே சோவைப் போல எழுத முடியும் என்று நந்தன் பத்திரிகை எழுதியது மிகப்பொருத்தமாகவே இருக்கிறது.

இஸ்ரேலைக் கண்மூடித்தனமாக ஆதரித்து இந்திய அரசின் நிலைப்பாடு களைத் தீவிரமாக எதிர்த்துவரும் சோவின் மீது மத்திய, மாநில உளவுத்துறையினர் ஒரு கண் வைக்க வேண்டும்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சோவின் எழுத்துக்கள் விரும்பத்தகாத விபரீதங்களுக்கு வித்திடுவது போல அமைந்துள்ளன. அரசுக்கு இதுகுறித்து அதிக எச்சரிக்கை தேவை. சோவின் அத்தனை தொடர்பு களையும் நுணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும்.கட்டபொம்மன் வாழ்ந்த தமிழ் நாட்டில்தான் எட்டப்பனும் இருந்தான். எழுச்சிமிகு எழுத்துக்களால் பெரியாரும் அண்ணாவும் சமூகப்பணி செய்த தமிழகத்தில்தான் அமெரிக்க அடிவருடிகளும், இஸ்ரேலின் எடுபிடிகளும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் 600 பள்ளிவாசல்களில் தொழுகைக்குத் தடை

இந்தியாவில் 600 பள்ளிவாசல்களில் தொழுகைக்குத் தடை அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் வரலாற்றுப் பின்னணியுடைய 600 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என நாடெங்கும் வாழும் முஸ்லிம்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் முகலாயர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தற்போது மத்திய அரசின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது. இந்தப் பழமையான பள்ளிவாசல் களில் தொழுகையை நடத்தும் உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான 600 பள்ளிவாசல்களில் தலைநகர் டெல்லியில் மட்டும் 53 பள்ளிவாசல்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. காரணம் இவையெல்லாம் வரலாற்று நினைவுச் சின்னங்கள் என்பதால் இங்கு தொழ அனுமதி இல்லையாம்.

தலைநகர் டெல்லியில் இருக்கும் 53 பள்ளிவாசல்களில் 1) புகழ்பெற்ற செங்கோட் டையில் உள்ளது. 2) ஒரு பள்ளிவாசல் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் அருகில் உள்ள சாலையில் இருக்கிறது. 3) சஃப்தர்ஜங் அருகே ஒரு பள்ளிவாசல், 4) லோடி பூங்காவின் அருகே உள்ள ஒரு பள்ளிவாசல், 5) குதூப்மினார் வளாகத்தில் ஒரு பள்ளிவாசல், 6) டெல்லி பழைய கோட்டையின் எதிரில் உள்ள கைருல் மன்ஜிலில் ஒரு பள்ளிவாசல், 7) டெல்லி கோல்ஃப் கிளப் மைனத்தின் உட்புறத்தில் உள்ள பள்ளிவாசல் 8) யமுனை நதிக்கரையில் வஜீராபாத் பாலத்தின் அருகில் உள்ள ஒரு பள்ளிவாசல் என பல பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் அவை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாம். அதனால் மத்திய அரசின் கீழ்வரும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பின் கீழ் வருகிறதாம். அதனால் தொழ அனுமதியில்லையாம்.

பள்ளிவாசல்களின் நோக்கம் தொழுகைக்காகவே. எந்தவித வரலாற்றுக் காரணங்களுக்காகவும் கட்டப்படவில்லை. முஸ்லிம்கள் எங்கும் எப்போதும் எந்த நேரத்திலும் தொழுவதற்காகவே பள்ளிவாசல்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

புனித மக்காவின் மஸ்ஜிதில் வணக்க வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவையும் வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்தான். கொள்ளை அழகு கொண்ட பள்ளி வாசலாக இருக்கட்டும். மிகப்பழமையான பள்ளிவாசலாக இருக்கட்டும். எத்தனை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாக இருக்கட்டும். அவைகளைப் பராமரிக்கும் உரிமையும் தகுதியும் முஸ்லிம்களுக்கே உண்டு என்றும் குறிப்பிடும் சமுதாயப் பிரமுகர்கள் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் எல்லா பள்ளிவாசல்களும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியத் தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படும் எண்ணற்ற பள்ளிவாசல்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளன.

டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தின் அருகிலிருக்கும் பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாவம் போனால் போகிறது என்று பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் இங்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். தங்கள் முன்னோர்கள் கட்டிய இறையில்லங்களில் நுழையவே முடியாமல் தவிக்கும் மக்களின் நிலை வேதனைக்குரியதல்லவா? அதிகார வர்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இதுகுறித்து ஒரு முடிவுறாத போர் தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லி வாழ் முஸ்லிம்கள் சஃப்தர்ஜங் மஸ்ஜிதில் தொழ அனுமதிக்க வேண்டும் என்று 80களில் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். லோடி பூங்காவில் உள்ள பள்ளி வாசலை மக்களுக்கு தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடத்தினார்கள் இவர்களின் வேண்டுகோள் நிர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவேன் என்றும் டெல்லி சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் சுஹைப் இக்பால் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை தீர்க்காமலே காலம் கழித்துவிட மத்திய அரசு நினைக்காது என்று நம்புகிறோம். காரணம் இது நீறு பூத்த நெருப்பு என்பதை முஸ்லிம் சமுதாயம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. பள்ளிவாசல்கள் தொழுகையாளிக்கு உரியது. சுற்றுலா செல்லும் சுகவாசிகளுக்கு உரியதல்ல. இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டுரிமைக்கு என்ன பொருள் என்றும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் வினா விடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதேவேளை யில் பிற சமுதாயத்தினர் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் காலணி களுடன் உள்ளே நுழைவது என்ன நியாயம் என்ற குமுறலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமல்ல என்பதே நடு நிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மக்கள் நலன் நாடும் மத்திய அரசு இந்திய முஸ்லிம்களின் பரம்பரை சொத்துக்களான பழமையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசல்களை ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும்

தேசப்பிரிவினைக்கு யார் காரணம்?

அதிர்ச்சி தகவல்கள்
இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாமல் போனதற்கு 1920க்கு்ம் 1940க்குமிடையே நடைபெற்ற பல நிகழ்ச்சிகளே காரணம். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு என்ற திட்டத்தை முதன்முதலில் கூறியவர்கள் இந்து தீவிரவாதிகள்தாம்.

இன்று இந்தியப் பிரிவினைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்வோர் 1920க்கு்ம் 1940க்குமிடையே நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பேச்சுகளையும் ஒருமுறை ஆராய்ந்து பார்க்கட்டும். இந்நாட்டை விட்டும் வெளியேறி விடுங்கள் அல்லது இங்கு இரண்டாம்தர பிரஜையாக இருக்க சம்மதியுங்கள் எனும் கோஷம் முஸ்லிம்களை நோக்கி பகிரங்கமாக போடப்பட்டது. "இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனித்தனி நாடு என்ற சிந்தனை முதன்முதலில் லாலாலஜபத்ராயின் மூளையில்தான் உதித்தது" என அவரிடம் ஆறு ஆண்டுகள் அந்தரங்க செயலாளராக இருந்தவரும், காந்தியின் நெருங்கிய சகாவுமான பண்டித் சுந்தர்லால் ரேடியன்ஸ் வார இதழி்ல் (13-6-1987) ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். இன்று ஆர்.எஸ்.எஸ். போற்றிப் புகழும் வி.டி.சாவர்க்கர் இந்துக்கள் ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எவ்வித எதிர்காலமும் இல்லை என்றும் 1917ம் ஆண்டிலிருந்து கூறி வந்ததாக ஆர்.என்.அகர்வால் The National Movement என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். குர்தகி மட சங்கராச்சாரியார்," இந்தியா இந்துக்களுக்கே சொந்தமானது முஸ்லிம்கள் இங்கு விருந்தினர்களே அவர்கள் விருந்தாளியைப் போலவே நடந்து கொள்ள வேண்டும்" என்று முஸ்லிம்களை எச்சரித்தார். அகில இந்திய சிவில் சர்வீஸில் உறுப்பினராக இருந்த ஹர்தயால், A Joint Hindu-Muslim State is Sheer Nonsense"இந்து-முஸ்லிம் இணைந்த ஒரு நாடு என்பது முழு முட்டாள்தனம்"என்று உரத்து சொன்னார்.

1923ல் வாரணாசியில் பண்டித் மதன்மோகன் மாளவியா தலைமையில் இந்து மகாசபை புதுப்பிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாத இயக்கத்தின் கொள்கை முஸ்லிம்களை மீண்டும் இந்துவாக மாற்றல், இந்துக்களுக்குப் போர் பயிற்சி தரல், அதன் முக்கிய குறிக்கோள்; இந்தியா இந்துக்களுக்கே…….. வேறு யாருக்கும் அதில் உரிமை இல்லை என்பதே. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட பின் வகுப்புக் கலவரங்கள் அதிகமாயின. இஸ்லாத்தையும், முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் இழிவுபடுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.லாஹூரில் ரங்கிலா ராஜா(கெட்ட நடத்தையுள்ள ராஜா) என்ற நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் முஸ்லிம்கள் போற்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களை பற்றி தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டது.

இவ்விதம் இந்து மத தலைவர்களி்ல் பலர் இந்தியாவின் பிரிவினையைப் பற்றி 1917லிருந்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது முஸ்லிம் தலைவர்களி்ன் நிலை என்னவாக இருந்தது?

இன்று இந்தியாவைத் துண்டாடியதாக அதிகம் குறை சொல்லப்படும் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் இரு நாடு என்ற திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். 1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக்கில் அவர் 1936ல் தான் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். அதுவரை இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவர் பாலமாகஇருந்தார்."The Ambassadar of Hindu-Muslim Unity" என்று சரோஜினிநாயுடுவால் பாராட்டப்பட்டவர். 1933ல் லண்டனில் மாணவராக இருந்த ரஹ்மத் அலி என்பவர் பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டைப் பற்றி குறிப்பிட்ட பொழுது "An Impossible Dream"(நடைபெற இயலாத கனவு) என்றார் ஜின்னா. 1906ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்லீக் 1940ம் ஆண்டு வரை தனி நாடு கோரிக்கையை வலியுறுத்த வில்லை. 1945,1946ல் தான் பாகிஸ்தான் கோரிக்கை வலுப்பெற்றது.தனிநாடு கோரிக்கையைப் பற்றி சிந்திக்காத ஜின்னா பின் பிடிவாதமாக தனிநாடு கேட்டது ஏன்? 1937க்கு பின் இடைக்காலஆட்சிப்பொறுப்பை ஏற்ற காங்கிரஸ் தான் காரணம் என்கிறார் சர்.சிம்மன்லால்சிடால்வாட். லிபரல் பார்ட்டியின் தலைவரும்,1930 ம் ஆண்டு நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டவருமான சிடால்வாட் Recollection and Reflection என்ற தனது நூலில் Congress Parentage of Partition தலைப்பின் கீழ் எழுதுகிறார். "பாகிஸ்தான் இயக்கத்திற்கு மூலாதாரம் காங்கிரஸ் தான். அது 1935ம் ஆண்டுச்சட்டப்படி ஆட்சிக்கு வந்த பொழுது நடந்து கொண்ட முறைகள் முஸ்லிம் சமுதாயத்தின் மனதில் சந்தேகத்தினை ஏற்படுத்தியது. முஸ்லிம்களின் முறையான கோரிக்கைகளைக் கூட அது நிறைவேற்றவில்லை"என்கிறார்.

வட்டமேஜை மாநாட்டில் மாகான மந்திரிசபைகளில் சிறுபான்மை பிரிவுகளையும் சேர்த்துக்கொள்வதென ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த மாகானங்களில் லீகின் உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலே தவிர மந்திரிப்பதவி இல்லை என கூறிவிட்டது. இதனை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதனை டாக்டர்.அம்பேத்கார் குறிப்பிடுகையில்" காங்கிரஸ் அனுசரித்த போக்கு விதிக்கு நேர்மாறானது. நாட்டின் இதர கட்சிகளையெல்லாம் நிர்மூலமாக்கி காங்கிரஸை நாட்டின் ஒரே அரசியல் கட்சியாக மாற்றுவதற்கே இம்முறை கையாளப்பட்டது. ஏகாதிபத்திய அரசாங்கத்தை நிறுவ செய்யப்படும் இம்முயற்சியை இந்துக்கள் ஒருக்கால் வரவேற்கலாம்.ஆனால் இம்முயற்சி சுதந்திர மக்கள் என்ற முறையில் முஸ்லிம்களை அரசியலில் சாகடிப்பதாகும்"எனக் கண்டித்து கூறுகிறார்.

காங்கிரஸ் ஆட்சியி்ல் இருந்த இரண்டு ஆண்டில் முஸ்லிம்கள் விரும்பாத பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அரசாங்க மொழியாக ஹிந்தி மட்டுமே உபயோகிக்கப்பட்டது. உருது புறக்கணிக்கப்பட்டது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. தங்கள் நபியைப்பற்றியோ கலிபாக்களையைப் பற்றியோ மற்றும் இஸ்லாம் சம்பந்தமான விஷயங்களோ பாடதிட்டத்தில் சேர்க்கப்படவில்லை. தங்களின் கலாச்சாரம்ஒரேயடியாக அழிந்து விடுமோ என முஸ்லிம்கள் அச்சப்பட்டனர்.
(Sir Regined Coupland. The Indian Problem)

இவ்வாறு காங்கிரஸ் நடந்து கொண்ட முறைகளைக் கண்ட ஜின்னா பூரண சுயாட்சி கிடைக்காத ஒரு நாட்டில் இடைக்கால ஆட்சிப் பொறுப்பி்ல் இருக்கும் காங்கிரஸ் இவ்வளவு அநீதி இழைத்தால் பரிபூரண சுயாட்சிப்பெற்று ஆட்சிக்கு வந்தால் என்னவாகும்.என எண்ணியே தனிநாடு தீர்மானத்தை 1940ல்ஆதரித்தார்.எனினும் அதனைத் தீவிரமாக வற்புறுத்தவில்லை. ஒன்றுபட்ட இந்தியாவில் மாகானசுயாட்சி என்ற அடிப்படையில் மாகானங்களைப் பிரிக்கலாம் என 1946 ம் ஆண்டு மே மாதம் 16ம்தேதி வெளியிடப்பட்ட கேபினட்தூதுக்குழுவின் முடிவினை ஜூன் மாதம் 6ம்தேதி கூடிய முஸ்லிம்லீக் கவுன்சில் ஜின்னாவின்ஆலோசனைப்படி ஏற்றுக்கொண்டது. 1940ல் அக்கட்சி இயற்றிய தனிநாடு கோரிக்கையை கைவிட தயாரானது. ஆனால், ஜூலை 10ம் தேதி நேரு கேபினட் தூதுக்குழுவின் முடிவை மாற்ற காங்கிரஸுக்கு உரிமை உண்டு என அளித்த பேட்டி நிலைமையை மோசமாக்கியது. "அடிக்கடி தன் நிலையை மாற்றிக் கொள்ளும் காங்கிரஸை நம்ப தயாராக இல்லை தனிநாடு தான் தீர்வு"என ஜின்னா முடிவாக கூறிவிட்டார்."நேருவின் பேட்டி இந்தியாவின் சரித்திரத்தையேமாற்றிவிட்டது"எனமௌலானாஅபுல்கலாம்ஆசாத் India Wins Freedom என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகளிலிருந்து ஜின்னாவும், முஸ்லிம்லீக்கும், முஸ்லிம்களும் நிர்பந்த சூழ்நிலையில் தான் தனிநாடு கேட்டார்கள் என்பது தெளிவாகும்.

பச்சை துரோகம்
வரலாற்றுப் புகழ் பெற்றகாந்தி-ஜின்னா ஒப்பந்தத்தின் போது ஜின்னா தந்த உறுதிமொழிகளை ஏற்ற ஜின்னா தனிநாடு கோரிக்கையை கைவிடும்மனநிலைக்கு வந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தனர் காங்கிரஸில் சுயநலவாதிகள். ஒன்றுபட்ட இந்தியாவில் முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு சரிசமமாக இருந்து விட்டால் தங்கள் சாதி மேலாதிக்கத்திற்கு ஆபத்து ஏற்படுமோ எனஅஞ்சினர். பிரதமராக ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்கள் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விடுமோ என பல காங்கிரஸ் தலைவர்கள் பதறினர். அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஜின்னாவிடம் பாகிஸ்தான் கோரிக்கையில் உறுதியாக இருங்கள் என்று தூண்டிவிட்டனர். பின்னாளில் இதை அறிந்த காந்தியடிகள் திரை மறைவில் நடந்த சூழ்ச்சிகளை எண்ணி மனம் வெதும்பியிருக்கிறார்.

வடஇந்திய முஸ்லிம்களின் அவல நிலை

ஆய்வுக்குழு தெரிவிக்கும் அதிர்ச்சிகர முடிவுகள்
வடஇந்தியாவின் ஆறு மாநிலங்களில் (டெல்லி, உ.பி., பீகார், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தான்) முஸ்லிம்களின் நிலை மிகவும் (அனைத்துத் துறை களிலும்) பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. நவீனகால ஊடகங்களுடன் அவர்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. அன்றாடச் செய்திகளை அவர்கள் அறிந்து கொள்வது அருகிலுள்ளோரிடம் வெறும் வாய்மொழியாகவே அறிந்து கொள்கிறார்கள். அச்சு ஊடகங்களை விட, காட்சி ஊடகங்களை விட இவர்கள் இம் மாதிரியான தகவல்களே அவர்களைச் சென்றடைகின்றன.

முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலையை ஆய்வுச் செய்ய நீதிபதி ராஜேந்திர சச்சார் தலைமையிலான பிரதமரின் உயர் மட்டக் குழுவின் ஆரம்பக் கட்ட ஆய்வுகள் இதனைத் தெரிவிக்கின்றன. அரசியல் துறையில் இவர்களின் பங்கெடுப்பு மிகவும் பலவீனமான நிலையில் உள்ளன. ஜனநாயக அமைப்பு முறையில் அவர்களது அரசியல் துறை சார்ந்த முன்னேற்றம் மிகவும் குறைந்த அளவிலே உள்ளதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கிறது. இவர்களது அரசியல் தலைவர்கள் கூட முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து வெளிச்சப்படுத்தவில்லை. அரசுத்துறை மற்றும் தனியார் துறையிலும் முஸ்லிம்கள் பெற்ற வேலை வாய்ப்பு மிகக்குறைந்த அளவிலே உள்ளன. நிலமற்றவர்களாகவும், கல்வி அறிவு குறைந்தவர்களாகவும் உள்ளனர்.

நகர்ப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் 42.9 சதவீதத்தினர் தொலைக் காட்சி வாயிலாக செய்திகளை அறிந்து கொள்கின்றனர். 19 சதவீதத்தினர் ரேடியோ செய்தி களையே கேட்டறிகின்றனர். நகர்ப் புறங்களில் 20.2 சதவீதத்தினர் செய்தித் தாள் படிப்பவர்களாகவும், அதுவே கிராமப்புற முஸ்லிம்களில் வெறும் 9 சதவீதத்தினரே செய்தித் தாள்களைப் படிக்கின்றனர். அரசாங்க வேலைப் பார்ப்பவர்கள் மிகவும் குறைவான அளவிலே உள்ளனர். வெறும் மூன்று சதவீதத்தினரே அரசுத் துறைகளில் உள்ளனர். தனியார் துறையில் 5.3 சதவீதத்தினர் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இது நகர்ப்புறத்தில் உள்ள நிலை.

கிராமங்களில் இதைவிட மோசமான நிலையே தொடரும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. 23.5 சதவீதத்தினர் குடிசைத் தொழில் செய்து வருகின்றனர். 17 சதவீதத்தினர் பகுதி நேர வேலை செய்பவர்களாகவும், 7 சதவீதத்தினர் பெட்டிக்கடை வைத்து பிழைப்பவர்களாகவும் உள்ளனர். கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களில் 60.2 சதவீதத்தினர் நிலமற்ற ஏழைகள் என்றும், 21 சதவீதத்தினர் மட்டுமே டிராக்டர் உடையவர்களாகவும், வெறும் ஒரு சதவீதத்தினர் பம்ப் செட்களை சொந்தமாக வைத்திருக்கின்றனர் என்பதும் நெஞ்சை அதிர வைக்கும் உண்மையாகும்.

0.3 சதவீத முஸ்லிம்களே கிராமப்புறங்களில் பட்டதாரிகளாக உள்ளனர். நகரங்களில் 40 சதவீதத்தினர் நவீன கல்வி வாய்ப்பைப் பெற்றாலும் 3.1 சதவீதத்தினரே பட்டதாரிகளாகவும் அதிலும் 1.2 சதவீதத்தினரே போஸ்ட் கிராஜுவேட் என்னும் முதுநிலைப் பட்டதாரிகளாய் உள்ளனர்.

இந்நிலையினால் முஸ்லிம்களால் கல்வி நிலையங்களைத் தொடங்கவோ நிர்வகிக்கவோ முடியாத நிலையே நிலவுகிறது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் கூட குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகளைப் பெறவோ, கல்விக் கட்டணம் செலுத்தி தரமான கல்வி வழங்கும் நிலையோ அவர்களிடம் இல்லை. இந்நிலையே நாடு விடுதலைப் பெற்றதிலிருந்தே இன்றுவரை உள்ள நிலைமையாகும். உண்மையை மூடிமறைக்கும் விதமாக முஸ்லிம்கள் அரசுகளாலும், அரசியல் கட்சிகளாலும் தாஜா செய்யப்படுகின்றனர் என்று மூளையற்ற மூடர்களின் உளறலும் தொடருகிறது. ஆய்வுகளின் முடிவுகளை நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான குழு எதிர்வரும் ஜூலை மாதம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகளின் முடிவுகளை நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையிலான குழு எதிர்வரும் ஜூலை மாதம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.