மக்கள் உரிமை

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இதழான மக்கள் உரிமையில் வெளிவந்த ஆவணங்கள்

இந்தியாவில் 600 பள்ளிவாசல்களில் தொழுகைக்குத் தடை

இந்தியாவில் 600 பள்ளிவாசல்களில் தொழுகைக்குத் தடை அதிர்ச்சித் தகவல்
இந்தியாவில் வரலாற்றுப் பின்னணியுடைய 600 பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என நாடெங்கும் வாழும் முஸ்லிம்களிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவில் முகலாயர்கள் ஆண்டபோது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் தற்போது மத்திய அரசின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ளது. இந்தப் பழமையான பள்ளிவாசல் களில் தொழுகையை நடத்தும் உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என பலமான கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான 600 பள்ளிவாசல்களில் தலைநகர் டெல்லியில் மட்டும் 53 பள்ளிவாசல்கள் உள்ளன. ஆனால் அங்கெல்லாம் முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை. காரணம் இவையெல்லாம் வரலாற்று நினைவுச் சின்னங்கள் என்பதால் இங்கு தொழ அனுமதி இல்லையாம்.

தலைநகர் டெல்லியில் இருக்கும் 53 பள்ளிவாசல்களில் 1) புகழ்பெற்ற செங்கோட் டையில் உள்ளது. 2) ஒரு பள்ளிவாசல் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் அருகில் உள்ள சாலையில் இருக்கிறது. 3) சஃப்தர்ஜங் அருகே ஒரு பள்ளிவாசல், 4) லோடி பூங்காவின் அருகே உள்ள ஒரு பள்ளிவாசல், 5) குதூப்மினார் வளாகத்தில் ஒரு பள்ளிவாசல், 6) டெல்லி பழைய கோட்டையின் எதிரில் உள்ள கைருல் மன்ஜிலில் ஒரு பள்ளிவாசல், 7) டெல்லி கோல்ஃப் கிளப் மைனத்தின் உட்புறத்தில் உள்ள பள்ளிவாசல் 8) யமுனை நதிக்கரையில் வஜீராபாத் பாலத்தின் அருகில் உள்ள ஒரு பள்ளிவாசல் என பல பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் அவை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாம். அதனால் மத்திய அரசின் கீழ்வரும் இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் பராமரிப்பின் கீழ் வருகிறதாம். அதனால் தொழ அனுமதியில்லையாம்.

பள்ளிவாசல்களின் நோக்கம் தொழுகைக்காகவே. எந்தவித வரலாற்றுக் காரணங்களுக்காகவும் கட்டப்படவில்லை. முஸ்லிம்கள் எங்கும் எப்போதும் எந்த நேரத்திலும் தொழுவதற்காகவே பள்ளிவாசல்கள் நிர்மானிக்கப்பட்டுள்ளன.

புனித மக்காவின் மஸ்ஜிதில் வணக்க வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவையும் வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்தான். கொள்ளை அழகு கொண்ட பள்ளி வாசலாக இருக்கட்டும். மிகப்பழமையான பள்ளிவாசலாக இருக்கட்டும். எத்தனை வரலாற்று சிறப்புமிக்க பள்ளிவாசல்களாக இருக்கட்டும். அவைகளைப் பராமரிக்கும் உரிமையும் தகுதியும் முஸ்லிம்களுக்கே உண்டு என்றும் குறிப்பிடும் சமுதாயப் பிரமுகர்கள் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் எல்லா பள்ளிவாசல்களும் சிறந்த முறையில் பராமரிக்கப்படுகின்றன. ஆனால் இந்தியத் தொல்பொருள் துறையினால் பராமரிக்கப்படும் எண்ணற்ற பள்ளிவாசல்கள் மிகவும் சிதிலமடைந்த நிலையிலேயே உள்ளன.

டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தின் அருகிலிருக்கும் பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பாவம் போனால் போகிறது என்று பெருநாள் தொழுகைகளுக்கு மட்டும் இங்கு அனுமதி வழங்கியுள்ளார்கள். தங்கள் முன்னோர்கள் கட்டிய இறையில்லங்களில் நுழையவே முடியாமல் தவிக்கும் மக்களின் நிலை வேதனைக்குரியதல்லவா? அதிகார வர்க்கத்திற்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இதுகுறித்து ஒரு முடிவுறாத போர் தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லி வாழ் முஸ்லிம்கள் சஃப்தர்ஜங் மஸ்ஜிதில் தொழ அனுமதிக்க வேண்டும் என்று 80களில் பெரும் போராட்டங்களை நடத்தினார்கள். லோடி பூங்காவில் உள்ள பள்ளி வாசலை மக்களுக்கு தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடத்தினார்கள் இவர்களின் வேண்டுகோள் நிர்தாட்சண்யமாக மறுக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும், இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவேன் என்றும் டெல்லி சட்டமன்றத்தின் துணை சபாநாயகர் சுஹைப் இக்பால் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் பிரச்சினையை தீர்க்காமலே காலம் கழித்துவிட மத்திய அரசு நினைக்காது என்று நம்புகிறோம். காரணம் இது நீறு பூத்த நெருப்பு என்பதை முஸ்லிம் சமுதாயம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. பள்ளிவாசல்கள் தொழுகையாளிக்கு உரியது. சுற்றுலா செல்லும் சுகவாசிகளுக்கு உரியதல்ல. இதைப் புரிந்து கொள்ளவில்லையெனில் அரசியல் சாசனம் வழங்கியுள்ள வழிபாட்டுரிமைக்கு என்ன பொருள் என்றும் முஸ்லிம் அறிவு ஜீவிகள் வினா விடுத்துள்ளனர்.
முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அதேவேளை யில் பிற சமுதாயத்தினர் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் காலணி களுடன் உள்ளே நுழைவது என்ன நியாயம் என்ற குமுறலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவது எவ்விதத்திலும் நியாயமல்ல என்பதே நடு நிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மக்கள் நலன் நாடும் மத்திய அரசு இந்திய முஸ்லிம்களின் பரம்பரை சொத்துக்களான பழமையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிவாசல்களை ஒப்படைக்க ஆவண செய்ய வேண்டும்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு